Profile

Monday, 26 August 2013

அபிநயம் வழி ஆயிரம் கதைகள் கூறும் அப்சரப்பெண்கள்



அபிநயம் வழி ஆயிரம்  கதைகள் கூறும்  
அப்சரப்பெண்கள்.
   
  மோகனப்ரியன் தவராஜா 
       

ஒரு நாகரிகம் தோன்றுவதற்கு நதி அவசியமாகிறது. மிகோங்க் மற்றும் தொன்லே சாப் நதிக்கரையில் தான் தெனோம் கூலன் என்ற ஊரை இரண்டாம் ஜயவர்மன்  நிர்மானிதான். அந்த நகரம் இன்று சியாம் ரீப் என்று அழைக்கப்படுகிறது. இந்த சியாம் ரெப்பில் தான் அதியமும் கம்பீரமும் கொண்டு வான் நோக்கி வா வென்று  உயர்ந்து நிற்கின்றது அங்கோர் வாட். பொதுவாக அங்கோர் மன்னர்களின் ஆட்சி சுமார் ஆறாம்  நூற்றாண்டில் தொடங்கியது.ஒரு நாட்டின் நாகரிகம் ஓர் காலத்தில் எவ்வளவுதான் செழிப்பாக இருந்து மறைந்து போனாலும் அடுத்தடுத்து வரும் சமுதாயத்துக்கு ஓர் கற்பனை காட்சிப்படமாக விளங்குவது அக்காலத்தில் கட்டிஎழுப்பப்பட்ட கோயில்களும், நுணுக்கமான கட்டடக்கலை வேலைப்பாடுகளும் , உயர்ரோட்டதுடன் செதுக்கப்பட்ட சிலைகளும், முன்வழி தோன்றி தழுவிவரும் கலாச்சாரமுமே. அந்த வகையில் பதினொராம் பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்ட கம்போடியா நாட்டின் கற்பனைக்கும்  எட்டாத  அளவுக்கு அற்புதமும் அழகும் நிறைந்த நினைவுச்சின்னங்கள் அக்காலகட்டத்தில் காணப்பட்ட கலைஜர்களின் திறமையையும் அவர்களின் திறமைவழி  ஈட்டிய சாதனைகளையும்  இன்றும் பிரதிபலித்து நிற்கின்றது.

கெமர் நாகரிகத்தின் அவர்களின்  படைப்புத்திறன் மிகவும் உயர்ந்த நிலையில் போற்றப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கதே. அவ்வழியே ஆக்கப்பட்ட பல நினைவுச்சின்னங்களின் மத்தியில் மிகவும் சிறப்புடையதும் கெமர் கலையின் உன்னத உதாரணமாகவும் விளங்கும் அங்கோர் வாட் எனும் மாபெரும் கோவில். இது உலகத்தினிலே மாபெரும் கோவில்  எனவும் பிரகண்டனப்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலின் ஒட்டுமொத்த அமைப்பும் பல வித்தியாசமான அமைப்புகளைகொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது பல  பிரகாசமான வித்தியாசமான முக அமைப்புகளைக்கொண்ட அழகிய நடனமாடும் சுமார் இரண்டாயிரம் அப்சரப்பெண்களின் உயிர் கொண்ட சிற்பங்கள் கோயிலின் ஒவ்வொரு மூலைகளிலும் உள்ள சுவர்களில் அழகாக புடைத்து செதுக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் கோவிலின் வாசலில் காணப்படும்  என்றுமே வயதுகுறையாத குணத்தினைகொண்ட  அப்சரப்பெண் சிற்பங்கள்  சுவர்க்கத்தின் மகிழ்ச்சியை அளிக்க வல்லதாய் சத்தியம் பூண்டு  நிற்பதாகவும் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் கெமர் மக்களின் அன்பை பிரதிபலித்து நிற்பதாகவும் என Wibur E.Garrett என்பவர் தனது ஆய்வில் கூறுகின்றார். 


அங்கோர் வாட் அமைந்துள்ள சிம் ரெப் இறுதியாகத் தாய்லாந்தின் வசம் இருந்தது. அது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்காரர்கள் கைக்கு மாறியது. பிரெஞ்சுக்காரர்களால்தான் அங்கோர் கோயில்கள் உலகப் புகழ் பெறத் தொடங்கின. அது மட்டுமல்லாது காடுகளைச் சுத்தம் செய்து அங்குள்ள கோவில்களை அவர்கள்தாம் புனருத்தாரணம் செய்தனர் என்றும் வரலாறு கூறுகின்றது கம்பூச்சியா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் கெமர்  என்றும் அழைக்கின்றனர். முதல் மூன்று நூற்றாண்டுகள் இந்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கி வந்தது. இந்த காரணத்தினால் இன்றும் இந்திய கலசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் அதிக அளவு காணப்படுகிறது.


அங்கோர் வாட் கோவில் மருவடிவமைக்கப்பட்ட சொர்க்கம் என்றுதான் கூறவேண்டும் அந்தவொரு எண்ணத்தில் தான் மிகவும் பெருமை பொருந்திய கெமர் மன்னன் இரண்டாம் சூரியவர்மன் நிறுவியிருக்கிறார். இக்கோயிலை மன்னன் மிகவும் பெருமை வாய்ந்த மேருமலையின் அமைப்பினை கருத்திற்கொண்டு முக்கோண வடிவினாலான  மூன்று மாடிகளுடன் கொண்ட ஐந்து கோபுரங்களை நிறுவியிருக்கின்றனர் அந்த கோபுரங்களின் அமைப்பு தாமரை மலரின் மொட்டுக்களை போல காட்சியளிக்கும் அழகு என்றுமே மெய் சிலிர்க்க செய்கின்றது. இந்த மேரு மலைக்கு ஒப்பான கோபுரங்கள் விஷ்ணு பெருமாள் பள்ளி கொள்ளும் உறைவிடமாக திகழ்ந்து வருகின்றது. அங்கோர் வாட் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதிகிரார்கள்.அகழி மேரு மலையை சுற்றி இருக்கும் பெருங்கடலை குறிக்கும் என்றால் கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர்,நிலம்,காற்று ஆகிய தளங்கள் ஆகவும்,மத்திய கோபுரத்தை சுற்றி இருக்கும் எழுவளையங்கள் மேரு மலையை சுற்றி இருக்கும் எழு மலைத்தொடர்களாக கருதுகின்றனர்.இக்கோவிலின் சூழல் அவ்விட மக்களின் இயற்கையான வாழ்வினை தத்துவரூபமாக கட்டவல்லதொரு முயற்சியினை தமது கலை அம்சத்தினால் உருவாக்கியிருக்கின்றார்கள் அந்நாட்டு கெமர் கலைஞர்கள்.அக்காலகட்டத்தில்  மனிதர்கள்  மெச்சத்தக்க நீதியான மிக அத்தியாவசியமான செயல்களை செய்வதன் மூலம் சுவர்க்கத்தில் உள்ள அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்க முடியும் என்ற அழ்ந்த கருத்துக்களை செம்மையாக பின்பற்றியிருக்கின்றனர்.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சேதமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார். கெமர் மக்கள் இந்து, புத்த மதங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதாக இதன் மூலம் அறியலாம். படையெடுப்பாலோ வன்முறையாலோ மதம் அங்கே திணிக்கப்படவில்லை எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசர்களின் காலனியாகவும் கம்போடியா ஒருபோதும் விளங்கியதில்லை. இந்தியாவில் இருந்து சென்ற புத்த மதம் பல நாடுகளிலும் பரவிப் பல்வேறு குணங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் வேரூன்றிய இந்து மதம் எத்தகைய மாறுதல்களுடன் கம்போடியாவில் குடியேறியது என்பதை அங்கோர் சிற்பங்களை வைத்து ஒருவாறாக ஊகிக்க முடிகிறது. இங்கிருந்து சென்ற வியாபாரிகள் வாயிலாகத்தான் இந்து மதம் அங்கே பரவியிருக்கிறது. ஆனால் ஆட்சியை நிலைநாட்டத் தொடங்கியவர்கள் அங்குள்ள கலாச்சாரத்திற்கு இணக்கமான ஒரு மதமாக இந்து மதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.


அடிமைகள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும். ஆனால் பிறப்பை வைத்துக் கொடுமைகள் புரியும் இந்து மதக் கூடா நெறிகள் அங்கே இருந்திருக்கமாட்டாது  கோயில் நுழைவு சமூகத்தினரின் எப்பிரிவுக்கும் மறுக்கப்பட்டிருக்காது. கோயில் சுவர்களில் எல்லா மக்களின் வாழ்க்கை முறைகளும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதால் அது எல்லோருக்குமான அரங்கமாகப் பயன்பட்டிருக்கக்கூடும். தவிரக் கம்போடிய மக்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்றுவரை அசைவ உணவுப் பழக்கம் உடையவர்கள். எனவே உணவுப் பழக்கத்தை வைத்துத் தீண்டத்தக்கவர், தகாதவர் என்னும் பாகுபாடுகளும்  உண்டாகியிருக்கமாட்டாது  இந்தியாவைப் போலன்றிக் கீழைநாடுகளில் இந்து மதம் பின்பற்றப்படாவிடினும் அது குறித்து இன்றுவரை அங்கே ஒரு நல்ல அபிப்பிராயம் நிலவுகிறது. சாதிப் பாகுபாடுகள் அங்கு வேர்விட்டிருந்தால் இந்து மதம் வெறுக்கப்பட்டிருக்கும். சுருக்கமாகக் கூறினால் கம்போடியாவில் இருந்த இந்து மதம் இந்தியாவிலுள்ள இந்து மதமல்ல.

கோவிலின் கட்டட அமைப்பு


     



கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசியா முழுவதும் இந்து மதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்திய கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினான். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் அவர்களது கற்பனையை மெய்யாகவே ஆட்கொண்டிருந்தன. அரசர்களைப் போலவே மக்களும் புராணங்கள் மீதும் மதக் கோட்பாடுகளின் மீதும் பெரும் நம்பிக்கைகள் கொண்டிருந்ததாலேயே கெமர் ஆட்சிக் காலத்தில் பல கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டன. அவ்வாறே பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக் கோயில் மட்டும் அல்ல உலகின் மிகப் பெரிய கோயிலும்கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்குத் திசை நோக்கிய இக் கோயில் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.



‘அங்கோர்’ என்கிற சொல் ‘நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. ‘வாட்’ என்றால் கோயில். ‘அங்கோர் வாட்’ என்பது நகரக் கோயில்.இதனைக்கட்டியவன் பெருமை மிகு இரண்டாம் சூரிய வர்மன். இந்திய, ரோமானிய, கிரேக்க, எகிப்திய மாயநாட்டுக்கலையை ஒன்று சேர்த்து சலவைக்கல்லால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கின்றது. கோயிலைச் சுற்றிலும் நம் நாட்டு அரண்மனைக் கோட்டைகளைச் சுற்றியுள்ளது போல் அகழி உள்ளது. எழு தலைகொண்ட நாகங்கள் கோயிலின் வாசலின் இருபக்கங்களிலும் செதுக்கியிருப்பது விஷ்ணு உறையும் வைகுண்டத்தினை வரவேற்பது போன்று நினைவுபடுத்துகின்றது.வெளிப் பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக் குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாரமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.


இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.   ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது . மேலும்  இக்கோயிலின் கட்டட அமைப்பின் இன்னுமொரு மெச்சத்தக்க சிறப்பு என்னவென்றால் மார்ச் மாதம் 21ம்  திகதி மற்றும்  செப்டம்பர் 21ம் திகதி  ஆகிய  காலப்பகுதியில் சூரியவதனத்தின் பொழுதும் சூரிய அஸ்தமனத்தின் போதும்  கோவில் கோபுரத்திற்க்கு பிற்பகுதியில் சரி நேராக எழுந்து வானின் உச்சியை அடைகின்றது. பார்ப்பதற்கும் சிந்திப்பதற்கும் இந்நிகழ்வானது கோபுரத்திற்கு திருவாசி சூட்டுவது போல் இருப்பது வியக்கத்தக்கதே இச்சூரியவதனத்தின் பொழுது கோபுரம் சாம்பல் நிறத்திலும் சூரியன் அஸ்தமிக்கும்  பொழுது தங்க நிறத்திலும் தென்படும் அழகு கண்கொள்ளா காட்சியாகும். இந்த பிரம்மிக்ககூடிய கட்டட அமைப்பு உலகத்தில் இரு இடங்களில் மாத்திரமே உள்ளன. முதலாவது கம்போடிய நாட்டில்  சியாம் ரெப்பில் காணப்படும்  அங்கோர்வாட் கோவில் இரண்டாவது இன்கா நாகரிகத்தில் தென்னமெரிக்க கண்டத்தில் மெக்சிக்கோவில் காணப்படும்  சீட்சநீட்சா எனும் பிரமிட் வடிவத்தினை கொண்ட வழிபாட்டுத்தலம். வானத்தில் சுமார் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து புகை படம் எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது.

சிற்ப மண்டபத்தின் சிறப்பும் வியப்பும்  
           



கோவிலைச்சுற்றி நான்கு பக்கங்களும் அமைந்திருக்கும் புடைப்புச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.கிழக்கு சுற்றில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தயும் கவர்ந்த ஒரு புராணகதையான   சமுத்திரத்தை கடைந்து அமுதம் எடுத்ததை சொல்லும் அந்த பாகவதப் புராண கதை.இந்த நாடுகளில் பல இடங்களில் பல வடிவம் தரப்பட்டிருக்கிறது.உதாரணமாக பாங்காக் நகரின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இந்த கதை மிக அழகிய வண்ணமயமான சிலைகளின் மூலம் சொள்ளபப்டுவதை காணலாம்.இங்கு கல்லில் சொல்லப்படுகிறது.வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி கடல்வண்ணன் மேற்பார்வையில் என்பத்திஎட்டு அசுரர்களும் தொண்நூற்றியொரு தேவர்களும் பாற்கடலை கடைகிறார்கள். ஐநூறு மீட்டர் நீளம் கொண்ட இந்த சிற்பத்தின் மையக்கொட்டை வாசுகி ஆக்கிரமித்து கொள்கிறது.விஷம் கக்கும் தலைப்பக்கத்தில்  அசுரர்களும் வால் பக்கத்தில்  தேவரகளும் கடல்வண்ணனே ஆமையாகி மத்திற்கு அடித்தளமாய் இருக்கிறான்.கடலில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் அல்லலாடுகின்றன.சில துண்டாக்கப்படுகின்றன. அசுரர்களின் பக்கபலமாக இலங்காபுரி மன்னன் ராவணேஸ்வரன் தனது பத்து தலைகளோடு நிக்கிறான்.அனுமன் தேவர்களுக்கு துணை புரிகிறான். சமுத்திர மதனம் சிட்பகாட்சி இடம்பெற்றிருக்கும் மண்டப தூண்களின்  நிழல்கள் தேவர்களிலும் அசுரர்களிலும் மாறி மாறி விழுகின்றன இந்நிகழ்வு நாட்களை கண்ணிக்கப்பயன்படுவதாகவும் ஆராட்சியாளர்கர் தங்களுடைய குறிப்பில் கூறுகின்றனர்.


அங்கோர் நாட்டின் பேரதிசயம் இந்த கோபுரங்கள் மட்டுமல்ல அல்ல. அமெரிக்கமூதாட்டி ஒருவர் தான் இறந்ததும் தனது சாம்பல் அங்கோர் வாட்டில் தூவபப்டவேண்டும் என்று விருப்பப்பட்டு அவ்வாறே தூவப்பட்டுமிருக்கிறது.இவ்வாறு இந்த இடத்துக்கு வருபவரை மீண்டும் வர தூண்டுவது மூன்றாம் சுற்றிலிருக்கும் புடைப்பு சிற்பங்கள் தாம்.இவை 60௦0௦ மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் கொண்ட சிற்பங்கள்.இந்த சிற்பங்களை வடித்தது மட்டும் அல்ல வடிக்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே ஓர் பேரதிசயம் தான்.இந்த சுற்றின் மேற்கு பகுதியில் குர்ஷேத்திர போர் செதுக்கப்பட்டிருக்கிறது.சிற்பத்தின் இரு பக்கங்களிலிருந்தும் வீரர்கள் சீராக வாத்தியங்கள் முழங்க அணிவகுத்து வருகிறார்கள். தலைவர்கள் தேர்களிலும் யானைகளிலும் வருகிறார்கள்.நடுப்பகுதியை நெருங்க நெருங்க போரின் உக்கிரம் முற்றுகிறது.ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்கிறார்கள். பீஷ்ம பிதாமகரை பார்க்கிறோம்-அம்பு படுக்கையில். குடுமி வைத்த துரோணர் அம்பு பூட்டிய வில்லோடு காட்சி அளிக்கிறார்.கர்ணன் தனது தேர்ச்சக்கரத்தை

தூக்க முயல்கிறான். அர்ஜூனன் அவன் மீது அம்பு எய்கிறான். அவனது தேரோட்டி நான்கு கரங்கள் கொண்ட கண்ணன். ராமாயண, மகாபாரதப் புராணக் காட்சிகள், திரௌபதி சுயம்வரம், பகிரதப்போர், கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கிய காட்சி, வாலி வதம், காம தகனம், பகிரத பிரேத்தனம், சூரிய வர்மன் போருக்கு செல்லும் காட்சி, அரண்மனையில் சூரியவர்மன் அரசாளும் காட்சி,சமுத்திர மதனம் ஆகியவை கோயில் சுவர்கள், தூண்கள் என்று எல்லாவற்றிலும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயில் முகப்புகளும் புராணக் கதாபாத்திரங்களும் கெமர் கலாச்சாரத்தையும் அம்மக்களின் உருவங்களையும்தான் கொண்டுள்ளன. செதுக்கப்பட்ட கட்சிகளில் ராமாயணதிலும், மகாபாரதத்திலும் கூட  இந்திய முகங்களை காண முடியாது .கெமர்கள் அவற்றை தங்களுடையதாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவாக இருந்திருக்கக்கூடும் என் யூகிக்கப்படுகின்றது. தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பிறநாடுகளிலும் இப்புராணங்கள் இவ்வாறே அங்குள்ள கலாச்சாரப் பின்னணிகளுடன் உள்முகப்படுத்தப்பட்டுள்ளன எனினும் இச்சிற்பங்களை வடித்தவர்கள் கெமர் சிற்பிகளே


கண்ணன் பானாசுரனோடு போர் புரிவது,சூர்யவர்மனின் பவனி.நரகத்தில் நமக்கு கிடைக்கும் தண்டனைகள் போன்றவை இந்த சுற்றின் மற்ற பகதிகளில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் என்னை மிக கவர்ந்த சிற்பங்கள் ராம,ராவண யுத்தத்தை சித்தரிப்பவை தான்.இந்த சிற்பங்களில் ராமன் தாவிப்பாயும் அனுமனின் தோளில் ஒரு கையில் வில்லும் ஒரு கையில் அம்பும்வைத்துக்கொண்டு அடுத்த கணம் அவனே ராவணன் மீது பாய்ந்துவிடுவான் போன்ற அவசரம் இந்த சிற்பத்தில் தெரிகிறது. ராவணன் பேய்த்தேர் ஏறி போர் புரிகிறான்.ராவணின் பத்து தலைகள் நமது ஊர் சிலைகளில் இருப்பது போல பக்கவாட்டில் இல்லை.அவை மூன்று அடுக்குகளில் 5 :4 :1 என்று பகுக்கப்பட்டு இருக்கின்றன என்று நினைக்கிறேன்.நமக்கு தெரிவது எழு தலைகள் தான்/ஆகப்பெரிய மூன்று தலைகள் முதல் அடுக்கில். மத்தியில் மூன்று.மகுடத்தில் ஒன்று.ராமனும் ராவணனும் ஒரு புறம் போர் புரிந்தாலும் நம்மை கவருவது குரங்குகள் தாம். அவை அசுரர்களுடன் பல உத்திகளில் போர் புரிகின்றன. ஒரு குரங்கு சிங்க முகம் கொண்ட அசுரனின் வாலை கடித்து துண்டாக்க முயல்கிறது. அங்கதான் ஒரு யானையின் தந்தங்களை பற்றி அதை சுழற்றி அடிக்கிறான் .நீலன் இரண்டு சிங்கங்கள் பூட்டிய தேர்களை சமாளிக்கிறான்.


ஆக போர் புரிந்தால் தான் வெற்றியை அடைய முடியும் என்பது இந்த சிற்பங்களில் திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது .மரணம் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை. ஆனால் மரணத்தால் கவியும் சோகத்தை ஒரு சிற்பி உட்கோபுர சுவர் ஒன்றில் வடித்திருக்கிறான்.வாலியின் உடலை வைத்துக்கொண்டு மற்ற குரங்குகள் சோகம் காப்பது போல் வடிக்கப்பட்ட இந்த சிற்பம் ஈடு இணையற்ற ஒரு கலைப்படைப்பு.

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது.கெமர்களின் கலை தனித்தன்மை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அங்குள்ள பிரமிட் வடிவ கோபுரங்களை இந்தியக் கோயில்களில் காண முடியாது.

இரண்டாம் சூரிய வர்மன் (கி.பி 1113 - 1150)

           

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்  யசோதபுர (Yashodapura) ஆகும் .இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள் அங்கோர் வாட் மற்றும் தொம் மனோன் (Angkor Wat, Thom Manon) கெமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.

அப்சரப்பெண்களின் தோற்றமும் அவர் வழி வந்த கெமர் இனமும்,

                                  

அமிர்தத்தினை பெறுவதற்காக தேவரும் அசுரரும் பாற்கடலை கடைய முற்படும்  போழுது பாற்கடலில் இருந்து தோன்றிய பல செல்வங்களுள் ஒன்று தான் இந்த அப்சரப்பெண்கள். இவ்வாறு தோன்றிய அப்சரப்பெண் ஒருவருக்கும் பாரதநாட்டினைச்சேர்ந்த கம்புமுனி என்பவருக்கும் பிறந்த குழந்தைகளின் வம்சாவழியே பிற்காலத்தில் கெமர் வம்சமாக தோற்றம் பெற்றது. இந்த அப்சரப்பெண்களின் அழகிலும் அசைவிலும் தோன்றியதே கம்போடியா நாட்டின் சாஸ்திரிய நடனமான அப்சர நடனம். எமது பரதநாட்யத்தின் புராணத்தோற்றத்தை சற்று ஆராய்ந்து பார்த்தோமானால், கைலாயத்தில் பரத முனி நடனத்தினை தன்னுடைய ஆண் மாணாக்கருக்கு கற்றுக்கொடுத்து அரங்கேற்றம் நிகழ்த்தும் பொழுது சமுத்ர மதனம், திரிபுரதகனம் போன்றவற்றை நாட்டிய நாடகங்களை அரங்கேற்றினர்.

அவ்வரங்கேற்றத்தின் அழகு முழுமை அடையவில்லை என்ற சிவபெருமானின் கருத்திற்கேற்ப விண்ணுலோகத்தில் இருந்து சுமார் இருபத்து மூன்று அப்சரப்பெண்களை வரவழைத்து மேலும் நாட்யத்துக்கு அழகு சேர்த்ததாக கூறப்படுகிறது. ஆக புராணம் காலம் தொட்டு அப்சரப்பெண்கள் அழகு தேவதைகள் எனவும் கலைகளை அழகுபடுத்தக்கூடியவர்கள் என்ற ஒரு கருத்தும்  உருவாகிவிட்டது. அதன் வழியே பின் தோன்றி வந்த கம்போடிய நாட்டு அப்சரப்பெண்களும் தம்முடைய அப்சர நடனத்தை பரதமுனியை மூல குருவாகவும், பரதமுனி இயற்றிய நாட்டியகைநூலான நாட்டிய சாஸ்திரத்தை பின்பற்றியும் தமது சாஸ்திரிய நடனத்தை அன்று முதல் இன்று வரை கற்றும், நிகழ்த்தியும் வருகின்றனர். மணிமேகலை காவியத்தினை மொனிமேகலா என்றும் ராமாயணம்  மற்றும் மகாபாரதத்தையும் அவர்கள் தமது சாஸ்திரீய நடனமான அப்சரநடனத்தில் நிகழ்த்தி வருகின்றனர். இவர்களுடைய சாஸ்த்ரீய நடனத்துக்கு அப்பால் அவர்கள் நாட்டுப்புற நடனத்தையும் நிகழ்த்துகின்றனர்.அன்நாட்டுபுற நடனங்கள் தமது வாழ்க்கை முறை, காதல், மீன் பிடித்தொழில் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.  

சோழ நாட்டில் ராஜராஜ சோழன் எவ்வாறு தேவதாசிகளையும் அவர் கலைகளையும் போற்றி வந்தானோ அதே போலத்தான் இரண்டாம் சூரிய வர்மனும் உலக கலை மாந்தர்களையும் அவர்கள் கலைத்திறமையையும் போற்றி வந்ததன் ஆதாரமே அவருடைய மேற்பார்வையில்  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்சரப்பெண்களின் உருவங்கள் கோவிற்தூண்களிலும், சுவர்களிலும் சிற்பங்களாக புடைக்கப்பட்டுள்ளன. இவ்வப்சரப்பெண்களை உற்று நோக்கும் பொழுது ஒவ்வொரு அப்சரப்பெண்ணும் ஒவ்வொரு நாட்டு இனத்தவரின் சாயலைக்கொண்டிருப்பதை எம்மால் காணமுடிகின்றது. அது மட்டுமல்லாது மிகவும் நுணுக்க்கமாகவும் வித்தியாசமாக அமைந்த அவர்களின் சிகையலங்காரம்  பல்வேறு சமுக கலாச்சாரகளை ஒன்றிணைத்தது போல் எமக்கு எடுத்துக்கூறுகின்றன .

                     

இவ்வப்சரப்பெண்கள் உலகத்தின் பல் வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் அன்பினையும்  வெளிப்படடுத்தும் அவர்களுடைய முகத்தோற்றமும்   தங்களுடைய கைகளில் ஏந்தியிருக்கும் தாமரை மலரும் சிறந்த உதாரணங்கள் என கூறமுடியும். தாமரையை பொதுவாக தூய்மையான இதயத்துக்கும்  ஒப்பிடுவர் அன்பு எனும் உன்னத உணர்வானதும் இதயத்திலிருந்தே  எழுகின்றது. ஆக அன்பு எனும் கோல்  கொண்டு கலை வளம் செழிக்கச்செய்த அந்த அப்சரப்பெண்களின் நினைவுகள் தான் இன்றும் உயிர் கொண்ட சிற்பங்களாய் அழகிய அங்கோர் வாட் கோயிலின் இன்றும் கதை சொல்லும் தருணங்களே. மூடிய கண்களும் திறந்த கண்களுமாகப் பெரிய தேவமுகங்களுக்கிடையே சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ள இக்கோயில்கள், வெறும் வழிபாட்டுத்தலங்கள் அல்ல என்பதை உறுதிசெய்கின்றன. ‘சுலபமாக நம்மால் பார்க்கவியலாத, சூர்ய ஒளி எளிதில் புகாத மூலைகளிலும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. வழிபாடு செய்ய இயலாவிடினும் இவ்வகையில் சிற்பங்களை வடித்ததன் மூலம் கெமர்கள் கடவுளர்களின் உலகத்தைக் கோயில்களில் உருவாக்கியதாக நம்பிக்கைகொண்டிருந்தனர்’ என்று அங்கோர் கோவில்கள் பற்றிய பிரதான ஆய்வாளர் எனப் பெயர் பெற்றுள்ள ஜார்ஜ் கோடிஸ் கருதுகிறார்.

                      

இன்று அங்கோர் பூமி தெளிந்த நீரோடையின் அழகைப் பெற்றுள்ளது. சேதமடைந்திருப்பினும் துப்புரவுடன் துலங்கும் அக்கோயில்கள் ஒருவேளை இவ்வாறுதான் ஆரம்ப முதலே படைக்கப்பட்டனவோ என்று எண்ணுகிற விதத்தில் கம்பீரம் குலையாது நிற்கின்றன. உலக அதிசயங்கள் என்று அதிகாரபூர்வமான பட்டியலில் அவை இடம்பெறாவிடினும் அவற்றைப் பார்ப்பவர்கள் அவ்விதமே கண்டுகொள்வார்கள் என்பது உறுதி.

மிகப் பரந்த நிலத்தில் கோயில்களை மட்டுமே கொண்டுள்ள நகரம் அங்கோர். விடியலிலும் பொழுது சாய்தலிலும் அதன் கோயில்களைப் பார்க்கும்போது காலத்தைக் கடந்து வாழ்வது என்பது என்ன என்பதை உய்த்து உணர முடிகிறது. இரவு ஆரம்பிக்கிறபொழுது சுற்றுலாப் பயணிகள் முற்றாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஆள் நடமாட்டம் சிறிதும் அற்ற அமைதியான பூமியாக மாறிவிடுகிற அங்கோரைக் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கும்போது கெமர்களின் ஆட்சி அங்கு மீண்டும் திரும்பிவிட்டது போன்றே தோற்ற மளிக்கிறது.
பல நூற்றாண்டுகளாக அடர்ந்த காடுகளாகவும் புதர்களாகவும் மண்டிக்கிடந்த நிலையில் எவருடைய கண்காணிப்பு அக் கோயில்கள் மீது இருந்ததோ அதே லோகேஸ்வரரின் கண்காணிப்பு அந்த இருளில் முன்போலவே தொடர்கிறது.

இந்த கட்டுரையை வரைய எனக்கு ஆர்வத்தை தூண்டியது என்னவென்றால்  வரும் நவம்பர் மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் அங்கோர் எனும் தலைப்பில் இக்கோயிலின் வரலாறினை எமது சிங்கப்பூர் அப்சராஸ் கலையகம் இலங்கை அருஸ்ரீ கலையகத்துடனும், சென்னை கலாக்ஷ்த்த்ரவின் தற்போதைய இயக்குனர் பிரியதர்ஷினி கோவிந்த் அவர்களுடனும், கம்போடிய அப்சர நடனகலைஞர்களுடனும், மலே நடனக்கலைஞர்களுடனும், சிங்கப்பூர் Esplanade Theatre இல் மாபெரும் நடன நிகழ்ச்சியாக வழங்கவிருக்கின்றோம்.இதற்கான கள ஆய்வுக்காக அங்கோர் வாட் இனை விஜயம் செய்ய கிடைத்த மிக அரிதான வாய்ப்பின் பலனே
அங்கோரினை பற்றிய இங்கே என்னுடைய இந்த அனுபவ பகிரல்கள்



தொகுப்பு : மோகனப்ரியன் தவராஜா

To visit my official page click here

No comments:

Post a Comment